
Palani Murugan Temple: அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை
இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 4 கோடியே 77இலட்சத்து 87 ஆயிரத்து 447 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1323 கிராமும், வெள்ளி 17ஆயிரத்து 671கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 2748ம் கிடைத்தன.
பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச்
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் என பலர் பங்கேற்றனர்.