
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை ஓடும் ஆட்டோவில் வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு காதலன் தப்பியோடிவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான பகவதி என்பவரது மகள் பவித்ரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தா.
பவித்ராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இவர், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். சாலையில் ஒரு இளைஞரை பவித்ரா சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் 2 பேரும், ஒரு ஆட்டோவில் பழனி அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பவித்ராவும் அந்த இளைஞரும் ஆட்டோவில் ஏறியதில் இருந்தே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் அதிர்ந்து போன ஆட்டோ டிரைவர் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.
உடனடியாக ஆட்டோவில் இருந்து அந்த இளைஞர் வெளியே குதித்து தப்பியோடி விட்டார். அப்போதுதான்தெரிந்தது பவித்ரா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் கிடந்தார். அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த இளைஞர் , பவித்ராவின் கழுத்தை அறுத்திருப்பது தெரியவந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் , பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற பவித்ராவின் உறவினர் மாயவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான், பவித்ரா கழுத்து அறுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
உறவினரான மாயவனும் பவித்ராவும் காதலித்து வந்திருக்கலாம் என்றும் தற்போது பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் பவித்ராவை கழுத்றுத்து கொன்றிருக்கலாம் என போலீசார் கூறினார்.