
தீபாவளிப் பண்டிகையன்று, ராமர் படத்துக்கு தீபராதனை காட்டி அதை சமூக ஊடகங்களில் வெளியிட்ட முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு “பத்வா” (தடை) பிறப்பித்துள்ளது.
அதன்படி முஸ்லிம் மதக்கொள்கைக்கு மாறாக வேறு மதக்கடவுளை வழிபாட்டால், அவர்களை முஸ்லிம்களாக ஏற்கமுடியாது என்று தரூல் உலூம் தியோபந்த் என்ற முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.
சமூக நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தீபாவளியன்று முஸ்லிம் மகிளா அமைப்பும், விஷால் பாரத் சனஸ்தான் அமைப்பும் இணைந்து ராமர் படத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தியது. அந்த புகைப்படங்கள் சமூக ஊடங்களிலும் வெளியாகின.
இந்நிலையில், இந்த புகைப்படம் வெளியான 3 நாட்களுக்கு பின் தரூல் உலூம் தியோபந்த் என்ற முஸ்லிம் அமைப்பு, ராமர் படத்துக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பத்வாவை இன்று பிறப்பித்துள்ளது.
ஆன்-லைன்மூலம் பத்வா பிறப்பிக்கும் துறையின் தலைவர் முப்தி முகம்மது அர்சத் பரூக்கி கூறுகையில், “ முஸ்லிம் என்பது ஒருகடவுள் கொள்கையை கொண்ட மதமாகும். இங்கு பல கடவுள்களை, பன்முகம் கொண்ட கடவுள்களை வழிபாடு செய்ய இடமில்லை. ஆதலால், முஸ்லிம் பெண்கள் இதுபோன்ற மற்ற மதங்களின் கடவுள்களை வழிபாடு செய்தால், அவர்கள் முஸ்லிம் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள்.
ஏந்த முஸ்லிம் பெண்களும் மற்ற கடவுள்களை வழிபட்டால், அவர்களுக்கு முஸ்லிம் மதத்தில் இடமில்லை. அவ்வாறு எந்த ெபண்ணும் செய்து இருந்தால் அது தவறாகும். அதற்கு மனம் வருந்தவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முஸ்லிம் மகிளா அமைப்பின் தலைவர் நஸ்னீன் அன்சாரி கூறுகையில், “ கடவுள் ராமர் என்பவர் எங்களுடைய முன்னோர். நாங்கள் மதத்தையும், பெயரையும் மட்டுமே மாற்றி இருக்கிறோம். ஆனால், முன்னோர்களை எப்படி மாற்ற முடியும். ராமர் குறித்த பாடல்கள் பாடுவதன் மூலம் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நல்ல உறவுப்பாலம் அமைக்கப்படுவது மட்டுமல்லாமல், முஸ்லிம் மதத்தின் பெருந்தன்மையும் வெளிப்படும்” எனத் தெரிவித்தார்.