98 வயதிலும் சுறு சுறு பாட்டி…. பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா நானம்மாள் !!

First Published Jan 26, 2018, 7:27 AM IST
Highlights
Padmasri award for 98 old grandma Nanammal from kovai


1000 பேருக்கு யோகா கற்றுக்கொடுத்த ஆசிரியை…. 5 பிள்ளைகளுக்கு தாய்… குடியரசுத் தலைவரிடம் பெண் சக்தி விருது பெற்றவர்… 98 வயதிலும் சுறுசுறுப்பு…தனது வேலையை தான் செய்து கொள்ளும் பாங்கு…. இப்படி அத்தனை பேரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர்தான் யோகா நானம்மாள்… இன்று அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் என்ற பெயரைக் கேட்டாலே சிறுபிள்ளைகள்  கூட குதூகலமாகி விடுவார்கள். அந்த அளவுக்கு 98 வயதிலும் யோகா செய்தும், யோகா கற்றுக்கொடுத்தும் பிரபலம் ஆகியிருக்கிறார்.

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வரும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தவர்.

இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத் தொடங்கிய நானம்மாள், அதை தனது 98 வயது கடந்த போதிலும் தொடர்ந்து வருகிறார்.

இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர்.

நானம்மாளிடம் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் யோகா கற்று பயனடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அதே நேரத்தில் நானம்மாள் இன்னும்கூட சிறுபிள்ளைகளைப்போல யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகிறார்

நானம்மாளின் மாணவர்களும்  சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த 98 வயது மூதாட்டியை தற்போது மத்திய அரசு கௌரவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது நானம்மாளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நானம்மாள் கடந்த ஆண்டு குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றுள்ளார்.

click me!