
காஞ்சிபுரம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் தபால் நிலையம் எதிரே காந்தி சாலையில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்,
ரேசனில் வழங்கப்படும் பொருள்களை குறைக்கக் கூடாது,
விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்,
பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,
இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்,
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருஞானம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மறியல் குறித்து தகவல் அறிந்த காவலாளரகள், மறியலில் ஈடுபட்ட 45-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.