
திருத்தணி கோயிலில் பக்தர் ஒருவரின் கைப்பையை பிடுங்கிச் சென்ற குரங்கை துரத்தி சென்றபோது தடுமாறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், அருணகிரிநாதர் பாடல் பாடிய தலமாகவும் விளங்குகிறது.
இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று பெங்களூருவைச் சேர்ந்த பெண் நளினி (45) என்பவர், திருத்தணி கோயிலுக்கு வந்துள்ளார். நளினி கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் அருகே வந்த குரங்கு ஒன்று, கையில் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடிச் சென்றது.
இதனைப் பார்த்து அதிர்ந்துபோன நளினி, குரங்கிடம் இருந்து பையை பறிக்க முயன்றார். பையை பிடுங்குவதற்காக, குரங்கை அவர் துரத்திச் சென்றார். அப்போது நளினி துரதிருஷ்டவசமாக கால் இடறி விழுந்தார். இதில் நளினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நளினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.