
திருநெல்வேலி
கடையம் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரம் அடிக்கும் மேல் போர்வெல் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீர் வராததால் பயிர்கள், மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நினைத்து நினைத்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்தது. கோடை வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால், விவசாயம் நடைபெறாமல் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அணைகளிலும் தண்ணீர் இல்லை.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா உள்ளிட்ட அணைகளிலும் தற்போது தண்ணீர் இருப்பு மிகவும் குறைவு.
இந்தத் தண்ணீரை கொண்டுதான் இன்னும் சில மாதங்களுக்கு குடித் தண்ணீர் வழங்க வேண்டி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடுமையான வறட்சியினால் குடிநீர் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் நிலத்தடி நீர்மட்டமும் இல்லாததால் போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நவ்வலடிகுளம், ஆனைகுட்டிகுளம், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளை சுற்றி விவசாயிகள் நெல்லி, எலுமிச்சை பயிரிட்டு அதனை 10 வருடங்களுக்கு மேலாக பேணி பாதுகாத்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக மரங்கள் அனைத்தும் கருகும் நிலையில் உள்ளன.
மரங்களைக் காப்பாற்றுவதற்காகத் தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரம் அடிக்கும் மேல் போர்வெல் அமைத்துள்ளனர். ஆனால், ஒரு போர்வெல்லில் கூட தண்ணீர் வரவில்லை என்பது தான் மோசம். இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே மழைக் காலத்திற்கு முன்பு ஆனைக்குட்டிகுளத்தில் உடைந்துள்ள மடையை மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.