பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
இதுதொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
* பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், பூங்கா நிர்வாகம். சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, அனைத்து பார்வையாளர்களின் வசதியையும் உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
* பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச Wi-Fi வசதியும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பண பரிவர்த்தனைகளுக்கு தனி கவுன்டர்கள் இருந்தன. மேலும், தனி டிக்கெட் கவுண்டர்களும் அமைக்கப்பட்டது.
* இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு 8000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. வாகன நிறுத்ததுமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது.
* சுமார் 6000-க்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.
* கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவ குழு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இதை, 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயன்படுத்தினர். ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
* பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து CCTV அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன.
* 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள். 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 NCC மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.
* பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன.
* பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும். வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்திருந்தது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட்டமாக அமைய சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடு செய்து பார்வையாளர்களின் மனதில் நீங்காத நினைவை உறுதி செய்தது.