இப்படி நம்ப வச்சு பொதுமக்களை ஏமாத்திட்டீங்களே! திமுக அரசுக்கு எதிராக கொதிக்கும் ஓபிஎஸ்!

By vinoth kumar  |  First Published Jan 16, 2025, 3:49 PM IST

பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. 


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்குவது வாடிக்கை. இதன் முக்கிய நோக்கம், பொங்கல் பண்டிகையை, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அனைத்தையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்து இருந்தது. நிதிநிலையை காரணம் காட்டி, ரொக்கம் வழங்கப்படாது எனவும் திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. இது திமுக அரசின் நிதிச் சீரழிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

Tap to resize

Latest Videos

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. பொங்கலுக்கு முன்பே வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப பணிகளை திமுக அரசு தொடங்கி இருக்குமேயானால், பொங்கலுக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இதனை வழங்கியிருக்கலாம். ஆனால், சரியான திட்டமிடல் இல்லை. திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு, அக்கறையின்மைக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. 

சென்ற ஆண்டும் இதே நிலைமை தான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், சென்ற ஆண்டு வேட்டி, சேலை வழங்காமலேயே, வழங்கிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்று குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம். திமுக அரசின் திறமையின்மை காரணமாக, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பணியாளர்களை சந்தேகப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் தவறுக்கு, நியாய விலைக் கடைப் பணியாளர்கள் பலியாக்கப்படுகின்றனர்.

முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யவும், இனி வருங்காலங்களில் பொங்கல் திருநாளுக்கு முன்பே இவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

click me!