கோவை மாணவி தற்கொலை விவகாரம்… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு டிச.10 வரை நீதிமன்ற காவல்!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 9:21 PM IST
Highlights

கோவை மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் கைதான மிதுன் சக்கரவர்த்தியை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் கைதான மிதுன் சக்கரவர்த்தியை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அந்த மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, அப்போதைய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை மேற்கு மகளிர் போலீசார் போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு  நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார், உடுமலை கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை யாராவது தாக்க முயற்சிக்கலாம் என்பதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மிதுன்சக்கரவர்த்தி ஒரு வேனில் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திடீரென்று ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தி முகத்தை போலீசார் துணியால் மறைத்தபடி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள்.

மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை, போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.  இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மிதுன் சக்கரவர்த்தி அழைத்து செல்லப்பட்டார். அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்ததை அடுத்து மிதுன் சக்கரவர்த்தி கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!