தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை , தூத்துக்குடி மாநகரங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வரலாறு காணாத மழையினால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இல்லாத அளவில் காயல்பட்டினத்தில் ஒரேநாளில் 306 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியுள்ளாகின.மேலும் மாநகராட்சி பணியாளர் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி நகரில் ஆரோக்கியபுரம், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்பதால் நோயாளிகளை பார்க்க உறவினர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை பணிக்கு சென்ற மருத்துவ பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் வெள்ள நீரில் முழ்கின.
மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.20 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவில் கிழக்கு பகுதியில் உள்ள கிரி பிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. கோவில் நாழிகிணறு நிறுத்தத்தில் இருந்து கார் செல்ல முடியாத அளவு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் நிரம்பி மறுகால் பாய்வதால் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளன.தொடர் மழையினால், ஏரி , குளம் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால், நகரின் பெரும்பாலும் இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையினால் நெல்லை நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.திருநெல்வேவில் டவுனில் முழங்கால் அளவு வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடியுருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில், சிறுவர்கள் குளித்து விளையாடும் காட்சிகளும் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. களக்காடு அருகே கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.