
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு தாலுகாவில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை எங்கள் குழந்தைகளுக்கு போடத் தேவையில்லை என்று கூறி பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சானூர்மல்லாவரம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போன்றவை ஒரே வளாகத்தில் அமைந்து உள்ளன. இங்கு 200–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது தட்டம்மை, ரூபெல்லாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு அதற்கான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதையடுத்து நேற்று ஆர்.கே.பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த ஊழியர்கள், மருத்துவர்கள் சானூர், மல்லாவரம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் வேக வேகமாக பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அங்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்களை முற்றுகையிட்டு “எங்க குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடத் தேவையில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் சிலர் மயங்கி விழுந்ததாகவும், சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் இருப்பதை நாங்கள் டிவி மற்றும் பேப்பர்ல பார்த்துகிட்டு தான் வர்றோம். அதனால் எங்க பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று அடித்துக் கூறிவிட்டனர்.
எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். யார் பேசினாலும், எவ்வளவு பேசினாலும் எங்க முடிவு இதுதான் என்று பேச்சில் அரிவாள் வீசினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, எந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போடாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.