
சென்னை
அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது அதிமுக.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறி சசிகலாவுக்கு எதிராக பிள்ளையார் சுழி போட்டார் ஒபிஎஸ். அதன்பின், அவருக்கு மக்களும், அமைச்சர்களும், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு கூடியது.
நேற்று ஆளுநரைச் சந்தித்த ஒபிஎஸ் தனது ராஜினாமவை திரும்பப் பெற விரும்புவதாகவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை அமைப்பேன் எனவும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் தெரிவித்தார்.
அதேபோல் சசிகலாவும் தமக்குதான் அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே, என்னைதான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரினார்.
இதனை அடுத்து தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன், “அதிமுகவைக் கைப்பற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முயற்சித்தால் அவரது கையை வெட்டுவேன்” என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வெறும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கொண்டு முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒபிஎஸ்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் கலைராஜன்.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பது அவரது சுயவிருப்பம். ஆனால், இப்படி கொலை மிரட்டல் விடுப்பது கட்சியின் தலைமையை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவுக்கு அது எதிராக அமையும் என்பதை சற்றும் யோசிக்காமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் கலைராஜன்.
கலைராஜனின் இந்த கொலை மிரட்டல், அதிமுக தொண்டர்களையும், மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சசிகலாவை பொதுச் செயலாளர் ஆவதற்கு, பல அமைச்சர்கள் தன்னை மிரட்டி தான் கையெழுத்து வாங்கினார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, சொகுசு ரெசார்ட்டில் இருக்கும் அமைச்சர்களும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் இருப்பார்களோ என்ற கேள்வி எழுகிறது.