
திருவண்ணாமலை,
கர்நாடகா மற்றும் தமிழக அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடகா அரசு அந்த தொகையை அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு பொறுப்பில்லாமல் பாதிக்கப்பட்டவரை இரண்டு வருடங்களாக ஏமாற்றி வருகிறது.
இதனால், விபத்து நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோமாலூரைச் சேர்ந்த விவசாயி குப்பன். இவருடைய மனைவி ஜெயம்மாள் (50). இவர்களுக்கு கோவிந்தராஜ், தருமன் என இரண்டு மகன்களும், விஜயா, ரூபா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து ஜெயம்மாள் கர்நாடக மாநில அரசு பேருந்தில் பெங்களூருவுக்குச் சென்றுக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த எறையூர் அருகே சென்றபோது எதிரே தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்து, கர்நாடக அரசு பேருந்தும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜெயம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஜெயம்மாளின் கணவர் குப்பன் மற்றும் அவரது பிள்ளைகள் என நான்கு பேரும் விபத்தில் உயிரிழந்த ஜெயம்மாளுக்கு நஷ்டஈடு தரக்கோரி திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி மணிவேல் விபத்து நஷ்டஈடாக ஜெயம்மாள் குடும்பத்துக்கு 5 இலட்சத்து ஆயிரத்து நூறு ரூபாய் தமிழக மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் இணைந்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் குப்பன் குடும்பத்தினரும் தங்களுக்கு கூடுதல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
இதனை விசாரித்த நீதிபதி மணிக்குமார் விபத்து நஷ்டஈடாக ரூ.6 இலட்சத்து 85 ஆயிரத்து 948 இரு மாநில அரசுகளும் குப்பன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை உத்தரவிட்டார்.
இதையடுத்து கர்நாடக அரசு விபத்து நஷ்டஈடாக பாதி தொகையான ரூ.3 இலட்சத்து 42 ஆயிரத்து 974-ஐ குப்பன் குடும்பத்தினரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வழங்கினர்.
ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம், மீதமுள்ள ரூ.3 இலட்சத்து 42 ஆயிரத்து 974-ஐ நஷ்டஈடு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதையடுத்து குப்பன் குடும்பத்தினர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிபதி, நஷ்டஈடு வழங்காத காரணத்தினால் அரசு பேருந்தை ஒன்றை ஜப்தி செய்யும்படி கடந்த மாதம் 12-ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுச் சென்றனர்.
கர்நாடக அரசு நஷ்ட ஈடை வழங்கியுள்ள நிலையில் இரண்டு வருடங்களாக எந்த நஷ்ட ஈடும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வேதனை அளிக்கிறது என்றும், கர்நாடகா அரசிற்கும் இருக்கும் பொறுப்பு, தமிழக அரசிற்கு ஏன் இல்லை என்றும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இதுபோன்ற பல விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், நஷ்ட ஈடு வழங்காமல் தமிழக அரசு, பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.