
OPS HEALTH : ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முதல் முறையாக MLA-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் நெருக்கடி காலங்களில் OPS-ஐ முதல்வராக்கி, கட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஜெயலலிதா நம்பினார். அந்த வகையில் அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் அதிமுகவில் இணைய பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாத நிலையில் தனித்து செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்ற பன்னீர்செல்வம் அங்து தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒருவார காலம் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இன்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓ,பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக வெளியான தகவலில் சென்னையில் ஆயிரம் விளக்கு அருகே உள்ள மருத்துவமனையில் வழக்கம் போல் உடல் நிலை பரிசோதனைகாக ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு சில மணி நேர பரிசோதனைக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் வீடு திரும்பியுள்ளதாகவும், அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.