
Eps tour of Namakkal district has been postponed : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களை திமுகவில் இணைத்து வருகிறது. எதிர்கட்சியான அதிமுகவும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வருகிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 29.9.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, எழுச்சிப் பயண ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025 மற்றும் 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் திருசெங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.