
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்… இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்….
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று மாலை அவர் பிதமர் நரேந்திர மோடியை சந்தித்தித்துப் பேச உள்ளார். மேலும் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியையும் ஓபிஎஸ் சத்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
சசிகலா சொத்துக் குவிப்பில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் , இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது சசிகலா அணி இயங்கி வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ், தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர் முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியையும் சந்திக்க இருக்கும் ஓபிஎஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு சான்றாக சில ஆவணங்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
உடல் நலக் குறைவால் நேற்று மரணமடைந்த மத்திய அமைச்சர் அணில் தவே இறுதிச்சடங்கிலும் ஓபிஎஸ் கலந்து கொள்கிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஓபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.