
மலர் கண்காட்சியை துவங்கி வைக்க வரும் முதல்வர் எடப்பாடியார் ரொம்ப நாட்களாக மலராமல் மொட்டாகவே இருக்கும் இரண்டு அணி இணைவை எப்பாடுபட்டாவது மலர வைப்பார் என்றொரு தகவலும் வெடித்துள்ளது!...
நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடைவிழாவில் மிக முக்கியமானது ‘ஃபிளவர் ஷோ’ எனப்படும் மலர் கண்காட்சி. ஜெயலலிதாவின் பங்களாக்களில் முக்கியமானதான கொடநாடு பங்களா இந்த மாவட்டத்தில் இருப்பதால் நீலகிர் கோடை விழாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதாவும் இந்த மலர் கண்காட்சியை நேரில் வந்து திறந்து வைக்க ரொம்பவே ஆசைப்படுவார். ஆனால் நெரிசல் சூழலில் பாதுகாப்பை காரணம் காட்டி அதை தவிர்க்க சொல்லிடுவார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விழாவுக்கான மலர்கண்காட்சி நாளை துவங்குகிறது. இதை துவக்கி வைக்க ஆக மெனெக்கெட்டு உதகை வருகிறார் எடப்பாடியார். ஆயிரத்தெட்டு குழப்பங்களுடன் அரசாங்கம் நிகழ்ந்துவரும் சூழலில் மலர்கண்காட்சியை துவக்கி வைக்க உதகை வரை அவர் வரவேண்டிய அவசியமென்ன? என்று அரசியல் பார்வையாளர்கள் ஐயப்பட்டார்கள்.
அதற்கான சிறு விடையும் இப்போது கிடைத்திருக்கிறதாம். அதாவது இழுத்துக் கொண்டே இருக்கும் இரு அணியின் இணைவு குறித்த முக்கிய முடிவுகள் சில உதகையில் முதல்வர் சற்றே தனிமையில் நிம்மதியான சூழலில் இருக்கும் நிலையில் எடுக்கப்படலாம் என்கிறார்கள். இரு அணிகளை இணைத்து கட்சியின் சரிவை சரிகட்டும் பணியில் சில நபர்கள் களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்களாம். நேரடி அரசியல்வாதியாக இல்லாத இவர்கள் முதல்வரை உதகையில் சந்தித்து சில ஆலோசனைகளை பெறவும், சில கருத்துக்களை முதல்வருக்கு வழங்கவும் வாய்ப்பிருக்கிறதாம்.
அதேபோல் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையின் முக்கிய தகவல்கள் பல இங்கே வைத்து முதல்வருக்கு நேரடியாக விளக்கப்படுமென்கிறார்கள். இந்த வழக்கின் இரண்டாவது முக்கிய குற்றவாளியாக பொதுவெளியில் போலீஸாரால் சுட்டிக்காட்டப்பட்ட சயானும் கிரிட்டிக்கல் நிலையிலிருந்து தேறி, அரசு பொது மருத்துவமனைக்கு மாறியிருப்பதும், இந்த விவகாரத்தில் அவனிடம் போலீஸ் துரித விசாரணையில் இறங்கியிருப்பதும் சூழலின் சூட்டை காட்டுகின்றன. ஆக இந்த வழக்கு விசாரணையில் இனி புதிய திருப்பங்கள் நிகழலாம்.
ஆக நீலகிரி விசிட்டின் போது முதல்வர் வேண்டுமானால் கூலாக இருக்கலாம் ஆனால் அதன் பிறகு அரசியல் மற்றும் போலீஸ் வட்டாரத்தில் சூடு செமத்தியாய் கிளம்பும் என்றே தெரிகிறது.