
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தங்கள் அணிக்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி. எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
விரைவில் பொதுத்தேர்தல் வரும் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறிவருகிறார். ஒருவேளை இந்த ஆட்சி தொடரக் கூடாது என அவர் நினைக்கிறாரோ? என்னவோ. அப்படி அவர் நினைத்தால் அம்மாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என்று கூறினார்.
அவரது அணியில் பதவியில் இல்லாதவர்களை சாந்தப்படுத்த அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப் பையை காட்டி ஏமாற்றுவது போன்று விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்கிறார். ஆனால் 2021 ஆம் ஆண்டு தான் பொதுத் தேர்தல் வரும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா பல்வேறு சோதனைகள் மற்றும் வேதனைகளை கடந்து போராட்டத்தையும் தாண்டி இந்த ஆட்சியை தக்க வைத்துள்ளார். தற்போது பொதுத் தேர்தல் வர மக்களுக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்த ஜெயகுமார் . ஓபிஎஸ் அணியில் உள்ள நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.