
லல்லு பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு…கருணாநிதி சட்டமன்ற வைர விழாவில் கலந்து கொள்ள இயலாது என அறிவிப்பு
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளை நடைபெறவுள்ள கலைஞர் கருணாநிதியின் வைர விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என லல்லு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ள விழா பாஜகவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளை கூட்டும் கூட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய நபராக லல்லு பிரசாத் யாதச் கருதப்பட்டு வந்தார். இந்நிலையில் தனக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தன்னால் அந்த விழாவில் கலந்து கொள்ள இயலாது எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துவதாகவும் லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் லல்லு பிரசாத் கருணாநிதியின் வைர விழாவில் கலந்து கொள்ளாதது திமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.