அரசின் அலட்சியப் போக்கு.. வாடும் அரசு ஊழியர்கள்.. ரேஷன் கடை ஊழியர்களை வஞ்சிக்கும் அரசு..? - ஓ.பி.எஸ் சாடல்..

Published : Jan 30, 2022, 06:09 PM IST
அரசின் அலட்சியப் போக்கு.. வாடும் அரசு ஊழியர்கள்.. ரேஷன் கடை ஊழியர்களை வஞ்சிக்கும் அரசு..? - ஓ.பி.எஸ் சாடல்..

சுருக்கம்

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் அந்த ஊதிய உயர்வு தங்களுக்கும் வரும் என்று நியாய விலைக் கடைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினால் 22-02-2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் புதிய அடிப்படை ஊதியத்தில் 14 விழுக்காடு வழங்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது என்பதையும், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எந்தத் தகவலும் அரசாணையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி, அரசிடமிருந்து இது குறித்து ஆணை பெறப்படும் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் 2 கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகையில் வந்துள்ள செய்தி அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆணையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று சொன்னாலும், திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை இப்பணியாளர்களுக்கும் வழங்கலாம் எனக் குழு பரிந்துரை செய்திருப்பதாக பக்கம் இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலையும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 01-01-2022 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதமே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருந்தால் அதற்கான அரசாணை அல்லது தெளிவுரை இந்த நேரத்தில் பெறப்பட்டு நியாய விலைக் கடைகளில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கும் அரசு ஊழியர்கள் பெறும் அதே நாளில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆனால் இதனைச் செய்ய அரசு நிர்வாகம் தவறிவிட்டது.

அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் நீண்ட நாட்களாக எந்த உயர்வையும் பெறாமல் பணியை மட்டும் மேற்கொண்டு வரும் நியாய விலைக் கடை ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு இந்த மாத ஊதியத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை