தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
தேனி தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகமாக பெற்று ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்து, தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், பணப் பட்டுவாடா செய்து அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அமமுகவில் புதிய மாற்றம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்
இந்த வழக்கை நிராகரிக்குமாறு ரவீந்திரநாத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின் முடிவில், தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.