
Dog bite incidents OPS Statement : தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் தெருநாய்களால் தினந்தோறும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாய் கடிப்பது மட்டுமில்லாமல் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பும் தொடர்கிறது. இதனையடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஒருவர் பத்திரமாக வீடு திரும்பி வருவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
நாய்கள் மற்றும் மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்க வலியுறுத்தி நான் அறிக்கைகள் வெளியிட்டேன். இருப்பினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இதன்படி, நாயின் புகைப்படம், நாய் உரிமையாளரின் புகைப்படம், தடுப்பூசி விவரங்கள் ஆகியவற்றை நாய் உரிமையாளர்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்படாததன் காரணமாக, பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தில் தங்கள் நாய்களை பதிவு செய்யவில்லை.
சென்னை மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் இருக்கின்ற நிலையில், 11,200 நாய்கள் குறித்த விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர தெரு நாய்களின் ஆதிக்கம் வேறு கொடிகட்டி பறக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என்பது வெறும் பெயரளவில்தான் இருக்கிறது.
தி.மு.க. அரசின் செயலற்ற தன்மை காரணமாக தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பல தரப்பினர் புகார்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. நாய்களைக் கட்டுப்படுத்தக்கூட நீதிமன்றம் செல்லக்கூடிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கும் செயல்.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நாய்க் கடியினால் 3.67 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மாநில அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.