தேங்கி கிடக்கும் தண்ணீர்... சென்னையில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்..! அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Dec 10, 2023, 7:04 AM IST
Highlights

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 3 பேரை கொல்லக்கூடிய சக்தி பாக்டிரியாயாவிற்கு உண்டு என தெரிவித்துள்ள ஓ பன்னீர் செல்வம் இந்தக் கிருமியை மண்ணிலிருந்து அகற்ற முடியாது என்பதால், நோயினால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

தேங்கி கிடக்கும் தண்ணீர்

சென்னை வெள்ள பாதிப்பால் தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை பெய்யும் போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை என்பதுபோல, கனமழை ஓய்ந்த பிறகு மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை.

Latest Videos

அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததையும், அந்த மழைநீருடன் கழிவு நீர் கலந்ததையும், அந்த நீரில் மக்கள் நடமாடியதையும், இந்தத் தருணங்களில் பாதுகாக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. 

தொற்று நோய் பரவும் அபாயம்

இதன் காரணமாக, பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றும், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் என்றும், இந்த நோயின் பாதிப்பு ஓராண்டு வரை தொடர வாய்ப்பு இருக்கிறது என்றும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 3 பேரை கொல்லக்கூடிய சக்தி பாக்டிரியாயாவிற்கு உண்டு என்றும், இந்தக் கிருமியை மண்ணிலிருந்து அகற்ற முடியாது என்பதால், நோயினால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டுமென்றும், இந்தத் தொற்று நுரையீரல், தோல், ரத்தம் ஆகியவற்றில் உருவாகும் என்றும், 

சிகிச்சை முகாம் நடத்திடுக

இருமல், சுவாசக்கோளாறு, நெஞ்சு வலி, காய்ச்சல், பசியின்மை, தலைவலி ஆகியவை இதற்கான அறிகுறிகள் என்றும்,  இது குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களிடையேயும், மக்களிடையேயும் ஏற்படுத்த வேண்டுமென்றும், இதன்மூலம் மனித உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் மக்கள் எளிதாக பெறமுடியும் என்பதையும்; நமது சமுதாயம் திறம்பட செயல்படுவதற்கும்,

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஆரோக்கியம் அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டு, நொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற்கொள்ளவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்கள் கொட்டப்பட்டதா? பதறியடித்து விளக்கம் கொடுத்த ஆவின் நிர்வாகம்.!!

click me!