கடனைத் திரும்பச் செலுத்த கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

By SG Balan  |  First Published Dec 9, 2023, 11:04 PM IST

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடனுதவி வழங்கவும், காப்பீட்டு தொகையை விரைந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"அண்மையில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

இந்த நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியமென்பதினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளபோதும், இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திடவும், கூடுதல் மிகைப்பற்று (Over Draft) வசதியினை வழங்கிடவும், கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும், காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடிவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வாய்ஸ் மெமேஜிலும் 'வியூ ஒன்ஸ்' ஆப்ஷன் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி?

click me!