அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த ஓபிஎஸ் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இருந்த போதும் தான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறி ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்,
அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தலாமா.?
கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தனது காரில் கட்சி கொடியை பயன்படுத்தாமல் இருந்து வந்தார். இதனையடுத்து இந்த உத்தரவிற்கு எதிராக இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் முறையிட்டார். அவசர வழக்காக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சார்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்படும் என தெரிகிறது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை பயன்படுத்தலாமா அல்லது தடை உத்தரவு செல்லுமா என ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்