
ஊட்டி – கூடலூர் சாலையில் உள்ள மலைப்பாதையில் தவளைமலை அருகே 30 அடி பள்ளத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் ஊட்டியில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மைசூருக்கு இயக்கப்படும் சொகுசு பஸ்சில் கோலாப்பூர் செல்வதற்காக புறப்பட்டனர். அந்த சொகுசு பஸ் ஊட்டி, தலைகுந்தா, பைக்காரா வழியாக கூடலூர் சென்று மைசூருக்கு செல்கிறது.
பெங்களூருவை சேர்ந்த டிரைவர் மதுக்குமார் பஸ்சை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் சாலையில் கூடலூருக்கு மேலே தவளைமலை உள்ளது. சுற்றுலாப்பயணிகள் அங்கு வாகனங்களை நிறுத்தி அந்த மலையின் அழகை ரசித்துச் செல்வார்கள்.
அந்த இடத்தில் சொகுசு பஸ் சென்ற போது, ஒரு வளைவில் திடீரென எதிர்பாராதவிதமாக சொகுசு பேருந்து சாலையோரம் நின்றிருந்த மரத்தில் மோதி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்டனர்.
அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் கூடலூர் அரகூ மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.