
கோவை மாவட்டத்தில் உள்ள வால் பாறைப்பகுதியில், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது அவ்வப்போது இருக்கும். மலைப்பகுதி என்பதால் அங்கு விறகு எடுக்க செல்லுபவர்களும் வன விலங்குகளால் தாக்குதலுக்கு உட்படுவர். வீட்டிலிருக்கும் மக்களும் கூட பல முறை வனவிலங்குகளால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.
அது போன்ற ஒரு சம்பவம் வால்பாறையில் நிகழ்ந்திருக்கிறது. வால்பாறையை சேர்ந்த முத்துலெட்சுமியும் அவரது 11 வயது மகள் சத்யாவும் விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றிருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று இருவர் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் முத்துலெட்சுமி நிலைகுலைந்து போன சமயம் பார்த்து, சத்யாவை கழுத்துப்பகுதியில் கவ்வியபடி காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பார்த்தது அந்த சிறுத்தை.
பெற்ற மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து சிறுத்தையை அடித்திருக்கிறார் முத்துலெட்சுமி. இதனால் சிறுத்தை அவர்மீதும் தாக்குதல் நடத்தியது ஆனால் முத்துலெட்சுமி தொடர்ந்து போராடியதில், சிறுத்தை அடி தாங்க முடியாமல் சத்யாவை விட்டு விட்டு ஓடிவிட்டது.
அதன் பிறகு சத்யாவை தூக்கி கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் முத்துலெட்சுமி. சத்யாவிற்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைத்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தனது மகளை காப்பாற்ற இந்த தாய் செய்திருக்கும் வீர சாகசம் அப்பகுதி மக்களுக்கு மிகவும் ஆச்சரியமளித்திருக்கிறது.