
கல்லீரல் பாதிப்புக்கு 80 சதவீதம் மதுதான் காரணம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக சுகாதார துறை செயலர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மனித உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடுகின்ற ஆன்டிபயாடிக்குகளை கல்லீரால் உருவாக்குகிறது. கல்லீரல் பாதிப்பு என்பது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு அருந்துவது, மது அருந்துவது, புகையிலை, பான்பராக், ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் பாதிப்படைகிறது. மன அழுத்தம், மனக்கிளர்ச்சி உள்ளிட்டவைகளாலும் கல்லீரல்
பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது. மேலும், கல்லீரலைத் தாக்கும் பல வைரல் ஹெப்பாடிட்டீஸ் வகைகள் உள்ளன. அவற்றுள் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஏழைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆனந்த் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
ஆனந்த் ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஏழைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கல்லீரல் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனந்த் ராஜின் மனுவை விசாரித்த நீதிபதி சத்யா நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத்துறை செயலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, கல்லீரல் பாதிப்புக்கு 80 சதவீதம் மதுதான் காரணம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் பொது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்ப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.