
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதுபோலவே, பேருந்துகளையும், புதிய பேருந்துகளாக மாற்றி இயக்க வேண்டும் என்று புதுகை ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். திருப்பூர், தஞ்சை, நாகை, திருவள்ளூர் மாவட்டம் போன்னேரி பேருந்து நிலையம், கோவை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், கோவை பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் அளித்த வாக்குகளை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காலாவதியான பேருந்துகள்தான் இயக்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், புதிய பேருந்துகளாக மாற்றி இயக்க வேண்டும் என்று கூறி புதுகை ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஐயப்பன், ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, தான் கொண்டு வந்த மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தார். அந்த மனுவில், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அரசின் முடிவு என்கிறார்கள். ஆனால், வடகாடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் எதுவுமே சாலையில் ஓட தகுதியற்றதாக உள்ளது.
காலாவதியான பேருந்துகள்தான் எங்கள் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. எனவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதுபோல, பேருந்துகளையும் புதிய பேருந்துகளாக மாற்றி இயக்க வேண்டும் என்று ஐயப்பன் கூறியுள்ளார்.