
கோயம்புத்தூர்
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியது போல, விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தாலுகா செயலாளர் விஜயா தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் அமிர்தம், மாவட்டச் செயலாளர் ராதிகா, மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி வரவேற்றுப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “விவசாயிகளுக்கு வழங்கியது போல, விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,
நூறு நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்,
மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பொருளாளர் சித்ரா நன்றித் தெரிவித்தார்.