
முறையான ஆவணங்கள் இல்லமால் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்யும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் கரன் சின்ஹா எச்சரித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையாளர் கரன் சின்ஹா தலைமையில் செல்போன் சேவைகள் வழங்கும் நிறுவன பிரதிநிதிகளுடன் இன்று காலை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், ரிலையன்ஸ், ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஐடியா, எம்.டி.எஸ், தொலை தொடர்பு துறை இயக்குனர், தொலை தொடர்பு துறை கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை பெருநகர காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிம் கார்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லமால் சிம் கார்டு வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மீறினால் உரிய நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொலை தொடர்பு அதிகாரிகள், மற்றும் காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கைப்பேசியின் ஐ.எம்.இ.ஐ. எங்களை திருட்டு தனமாக பதிவேற்றம் செய்து விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
குற்ற செயல்களுக்காக குறுஞ்செய்தி அனுப்புவோரை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும், ஒரு செய்தியின் உண்மை தன்மை தெரியாமல் வாட்ஸ் ஆப்பில் செய்தி பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் கரன் சின்ஹா அறிவுறுத்தினார்.
இதில் ஏராளமான காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.