காங்கிரசுக்கு ஓகே சொன்னால்தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறும் - பில்டப் கொடுக்கும் திருநா...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 25, 2018, 2:05 PM IST
Highlights

காங்கிரசை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து மத்தியில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவோம் என்று தமிழ்நாடு காங்கிரசு குழுவின் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.
 

திருவண்ணாமலை 

காங்கிரசை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து மத்தியில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவோம் என்று தமிழ்நாடு காங்கிரசு குழுவின் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

திருவண்ணாமலை காங்கிரசு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்டத் தலைவர் தவணி அண்ணாமலை தலைமை வகித்தார்.

இதற்கு காங்கிரசு குழுவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய ஊடகச் செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் தசரதன் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரசு குழுவின் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். இதில் அவர் பேசியது:  "நான் தமிழ்நாடு காங்கிரசு குழுவின் தலைவரானபோது 62 மாவட்டங்கள் இருந்தன. இப்போது 72 மாவட்டங்கள் உள்ளன.

காங்கிரசின் வளர்ச்சிக்காக மாவட்டந்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் குழு அமைத்தல் போன்றவை என மொத்தம் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன. தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகு ஏழு மாதங்களில் 1500 போராட்டங்கள் நடந்துள்ளது என்று அவர் கூறுகிறார். இதற்கு சரியான ஆளுமை இல்லாததே காரணம். 

மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி காங்கிரசு கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரசை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து மத்தியில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவோம்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாநில மகிளா காங்கிரசு தலைவி ஜான்சி ராணி, மாநிலச் சிறப்பு அழைப்பாளர் கருணாமூர்த்தி, மாநில வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் ராஜாராமன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ஜெயசீலன், அப்துல்கலீம், மாவட்டத் துணைத் தலைவர்கள் அன்பழகன், பன்னீர்செல்வம், வட்டாரத் தலைவர் அன்புதாஸ், விஜயகாந்த், ராஜேந்திரன், 

மாவட்ட மகிளா காங்கிரசு தலைவி ஜெயசீலி, பெரணமல்லூர் நகரத் தலைவர் பழக்கடை பாலையா, விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். தொகுதி அமைப்பாளர் கலைமணி நன்றித் தெரிவித்து கூட்டத்தை முடித்துவைத்தார். 

click me!