
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் 110 இடங்களில் எண்ணெய் எடுக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக காவல் துறை டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனுடன் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் 110 இடங்களில் எண்ணெய் எடுக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் போரட்டம் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக காவல் துறை டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனுடன் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் 5 பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஒஎன்ஜிசி தலைமை பொறியாளர் ராஜசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க எவ்வித அனுமதியும் கோரப்படவில்லை எனவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்ட பணிகளுக்கு தான் அனுமதி கோரியுள்ளதாகவும், தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஒஎன்ஜிசி விளக்கம் அளித்து வருவதாகவும், ஒஎன்ஜிசி பணிகளால் பாதிப்பு ஏற்படாது என மக்களுக்கு விளக்கம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.