
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலையெங்கும் மழைநீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும், கடந்த 24 மணி நேரங்களில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 செ.மீ. மழை பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.