கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்.. மேலும் ஒருவர் கைது!!

By Narendran SFirst Published Sep 26, 2022, 11:42 PM IST
Highlights

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் மீது கடந்த செப்.22 ஆம் இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். அந்த பாட்டில் அலுவலகத்தின் படிக்கட்டு அருகேயுள்ள, மின்கம்பம் அருகே விழுந்தது. அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அருகே சென்று பார்த்த போது, மர்மநபர்கள் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, திரியை பற்ற வைத்து கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு சென்றதும், காற்றின் வேகத்துக்கு திரியில் இருந்த தீ அணைந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: அனைத்து மாநிலங்களும் வியக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

இதுக்குறித்து தகவலறிந்து வந்த காட்டூர் போலீஸார், அங்கு கிடந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: RSS ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்... உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!!

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பிஎப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ளவர்களை போலீஸ் தேடி வருகிறது என்று தெரிவித்தார். 

click me!