ஒரு இலட்சம் பழங்குடியினர் வீடுகளில் சுதந்திர தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றிப் போராட முடிவு...

Asianet News Tamil  
Published : Aug 11, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
ஒரு இலட்சம் பழங்குடியினர் வீடுகளில் சுதந்திர தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றிப்  போராட முடிவு...

சுருக்கம்

One lakh tribal people decided to fight blackmail on Independence Day at home ...

தேனி

வன உரிமை சட்டம் - 2006-ஐ தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் 1 இலட்சம் பழங்குடியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தேனியில் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29-வது மாநில மாநாடு தேனி மாவட்டம், கம்பத்தில் வருகிற 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது.

இதில் பங்கேற்க கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு விவசாய சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தேனியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர், “கம்பத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், விவசாய சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணன் முல்லா மற்றும் அகில இந்திய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இதில், உழவர் கலை விழாவை ‘ஜோக்கர்’ திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், வறட்சி, கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஜி.எஸ்.டி. என்ற வரி விதிப்பை அமல்படுத்த முடிந்த அரசால், ஏன் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை?

சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையால், கிராமப்புற பொருளாதாரம் முடங்கியுள்ளது. கால்நடைகளை ஏற்றிச் செல்லும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உடனே, இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டம் என்பது தனியார் காப்பீடு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக செயல்படுகிறது. இதில் தனியார் காப்பீடு நிறுவனங்களை வெளியேற்றி விட்டு, தேசிய பயிர்காப்பீடு நிறுவனம் மூலமும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும் காப்பீடு செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆறு இலட்சம் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, ரூ.1½ லட்சம் செலுத்தினால் தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தட்கல் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு துரிதமாக வழங்க வேண்டும்.

தனியார் கரும்பு ஆலைகள் சுமார் ரூ.1664 கோடி நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளன. இதனால், 5 இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன உரிமை சட்டம் - 2006-ஐ தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகிற 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் 1 இலட்சம் பழங்குடியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கம்பத்தில் நடைபெறும் மாநாடு என்பது அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இருக்கும். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்து கேரள அரசிடம் வலியுறுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் குளம் தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது.

மதுரை கிரானைட் வழக்கில் சகாயம் அளித்த விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றம் வெளியிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்