
தஞ்சாவூர்
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் அவர்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு என்று டி.டி.வி.தினகரன் ஆவேசமாக பேசினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே கட்சியை வழி நடத்துவார்கள். டி.டி.வி.தினகரனின் நியமன அறிவிப்பு செல்லாது என்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், தஞ்சைக்கு நேற்று வந்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவித்துள்ளது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் அதிமுக என்ற லெட்டர்பேடில் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செயல்.
சசிகலா சொன்னதால் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் தேர்தல் ஆணையத்தின் தலைவராக எப்போது பொறுப்பு ஏற்றார் என்று தெரியவில்லை?
இன்று (நேற்று) இவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தால் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பதவி பறிபோகும்.
அதிமுக-வின் சட்ட விதிகளுக்குட்பட்டுதான் பொதுச் செயலாளர் சசிகலாவால் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். நியமன பதவிகளில் நிர்வாகிகளை நியமிக்க பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்திலும் துணைப் பொதுச் செயலாளர் என என்னை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலும் இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் கையெழுத்துப் போட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஒன்றை சொல்கிறார்கள். வெளியே வந்து வேறொன்றை சொல்கிறார்கள். எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது.
கட்சியின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லும் என இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மடியில் கனம் இருப்பதாலும், எங்களை நீக்கினால் பதவியில் சுதந்திரமாக செயல்படலாம் என்ற எண்ணத்திலும் இப்படி செயல்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தில் ஒன்றை சொல்லிவிட்டு, இப்போது மாற்றிச் செயல்படும் மோசடிக்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாது
ஆர்.கே.நகரில் என்னுடன் ஒரே ஜீப்பில் பிரசாரம் செய்தவர்கள் இப்போது என்னை எதிர்க்கிறார்கள். கட்சி, ஆட்சியைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இருக்கும் வரை இருப்பதை சுருட்டி கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருக்கின்றனர். மடியில் கனம் உள்ளவர்கள், பதவியில் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள்.
நான் பொறுப்பான பதவியில் இருப்பவன். எடுத்தேன். கவிழ்த்தேன் என்று செயல்படமாட்டேன். எதையும் பொறுமையாக யோசித்து செயல்படுவேன். ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் உள்ளது. தவறு செய்தவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.
1½ கோடி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நன்றி மறந்தவர்கள்? யார் நல்லவர்கள்? என்பது பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். கட்சி ஒன்றுபட வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல வேறு கட்சியை சேர்ந்தவர்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
பொதுச் செயலாளர் சசிகலாவால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டு அவரும் ஊதியம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக காசோலையில் கையெழுத்து போட்டு வங்கியில் பணம் எடுத்து வருகிறார். பொதுச் செயலாளரால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனால் வங்கியில் இருந்து பணம் எடுக்கும்போது, அதே பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நான் துணை பொதுச் செயலாளராக செயல்பட எந்தவித தடையும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் அவர்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டால் கட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு பதவி கொடுத்தவர்களை மறந்துவிட்டு சுயநலத்துடன், எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து பதவியில் இருந்தால் போதும் என செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய மனதைரியம் ஜெயலலிதா வழியில் வந்த எங்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் நடப்பதே நாங்கள் உருவாக்கிய ஆட்சி தான். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தவும், மக்களை சந்திக்கவும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறேன்.
நான் எனது கட்சி பணியைத் தொடங்கி விட்டேன். என்னை தடுத்து நிறுத்த, பதவியில் இருந்து நீக்க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. அவர் வார்த்தைக்கு மட்டும் தான் கட்டுப்படுவேன்.
நேற்று முளைத்த காளான்களுக்கும், சுயநலத்துடன் செயல்படுபவர்களுக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.
தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று முதல் கட்டமாக ஒன்பது கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். முதல் கூட்டம் மதுரை மேலூரில் நடக்கிறது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என்று ஜெயலலிதா கூறியதை வேதவாக்காக கருதி எனது பணியைத் தொடங்கி இருக்கிறேன்” என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.