
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். அவரது நணபர்கள் ஐவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள செட்டிபாளையத்தில் உணவகம் நடத்துபவர் கோயம்புத்தூர், வீரபாண்டியை சேர்ந்த பழனிசாமி மகன் பூபாலகிருஷ்ணன் (28).
உப்பிலிபாளையம், ராமானுஜ நகரைச் சேர்ந்த தாமோதரன் மகன் விஷால்கிரண் (24), கோயம்புத்தூர், மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஷ் பாலாஜி (22).
அதே பகுதியைச் சேர்ந்த மாதன்ராஜ் மகன் பிரவீண் (21). பீளமேடு கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (22), தாராபுரம், அண்ணா நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் ஹரி பிரசாத் (25) ஆகியோர் நண்பர்கள்.
பூபாலகிருஷ்ணனின் உணவகத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி இரண்டு கார்களில் அதிகாலை 3.15 மணியளவில் இவர்கள் ஆறு பேரும் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் பல்லடம், கோடங்கிபாளையம் அருகே வந்தபோது விஷால் கிரண், ஹரிஷ் பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் வந்த கார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி குப்புறக் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த விஷால் கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர்களுக்குப் பின்னால் வந்த பூபாலகிருஷ்ணன், பிரவீண், ஹரி பிரசாத் ஆகியோரது கார் திடீரென பிரேக் பிடித்ததால் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பூபால கிருஷ்ணனைத் தவிர பிற அனைவரும் பலத்த அடிபட்டதால் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக பல்லடம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.