
திருவள்ளூர்
திருவள்ளூரில், வெயிலால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு ஆலங்கட்டி மழை பெய்த மகிழ்ச்சியில் இருந்தபோது, இடி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 110 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது.
பகல் நேரங்களில் அனல் காற்று பலமாக வீசுவதோடு, இரவு நேரங்களில் கடும் புழுக்கமாகவும் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
ஆனால், திடீரென பள்ளிப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வானம் இருண்டு, இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
மழையின்போது ஆர்.கே.பேட்டை அருகே சி.ஜி.எஸ்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி திருவாமணி (37) பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது இடி விழுந்ததில், திருவாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
ஒருபக்கம் மழை பெய்து நிலத்தையும், மக்கள் மனத்தையும் குளிர்வித்ததையும் எண்ணி சந்தோசப்படும் தருவாயில், இடி விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.