
திருவள்ளூர்
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் சாராய்க் கடை மேற்பார்வையாளரை வழிமறித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து, அவரிடமிருந்த ரூ.12 இலட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் திருச்செல்வம் (35).
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சாராயக் கடையை பூட்டிவிட்டு, விற்பனை பணம் ரூ.12 இலட்சத்தை பையில் வைத்துக் கொண்டு ராகவ ரெட்டிமேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
ராகவ ரெட்டி மேடு சாலையில் சென்றபோது, திருச்செல்வத்துடன் அவரது அண்ணன் ராமசந்திரனும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பேசியபடி சென்றுள்ளனர்.
அப்போது வேகமாக வந்த கார், திடீரென இருசக்கர வாகனங்கள் மீது, உரசுவது போல் வழிமறித்து நின்றது. இதில் நிலை தடுமாறிய திருச்செல்வம், ராமசந்திரன் ஆகியோர் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மூன்று மர்மநபர்கள் அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். இதில், திருச்செல்வத்தின் நெற்றியில் கத்தி வெட்டும் விழுந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த ரூ.12 இலட்சத்தை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு, வந்த காரில் தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் திருச்செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில், காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து காவலாளக்ரள் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.