
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்ரமணியன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியம் அரசு கட்டிட ஒப்பந்தப் பணிகளை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான குவாரி உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதே போல சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
இந்த அதிரடி சோதனையை அடுத்து, கடந்த 4ஆம் தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமையன்று காலை நாமக்கல் அருகே மோகனூர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாய தோட்டத்துக்கு சென்ற சுப்ரமணியம் அங்கு மயக்கமடைந்து கீழே உழுந்துள்ளார்.
இதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பதறியடித்துக்கொண்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனூர் போலீசார் அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில், சுப்ரமணியத்தின் உடல் நேற்று மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் விஷம் இருந்ததாகவும், இதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
அவர் விழுந்து கிடந்த இடத்தில் குளிர்பான பாட்டில் இருந்ததாகவும், அதில் விஷம் கலந்து குடித்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.