விஜயதசமி தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் நாளை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, விடுமுறை தினமாக இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜயதசமி கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளின் சுட்டு விரலைப்பிடித்து, தட்டில் பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுதகற்றுக் கொடுப்பார்கள். இதே போல பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு நெல்லியில் அ என்ற எழுத்து எழுதப்படும். விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் பிரிகேஜி, எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளில் ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
தனியார் பள்ளிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் நாளை விஜயதசமி கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளியின் விளம்பரம்
இதனிடையே வேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரஅறிவிப்பில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை, விலையில்லா புத்தகம், காலை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாக தனியார் பள்ளிக்கு போட்டியாக அரசு பள்ளிகளும் விளம்பரம் செய்துள்ளன.
இதையும் படியுங்கள்
தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!