
ராமநாதபுரத்தில், முதியோர் பென்ஷன் வழங்கக்கோரி, மக்கள் குறை தீர்ப்பு முகாமில் முதியவர்கள் சிலர் மனு கொடுத்துள்ளனர். அதில் எங்களுக்கு முடிஞ்சா பென்ஷன் பணத்த கொடுங்க. முடிவில்லை என்றால் விஷத்தைக் கொடுங்க என்று மனுவில் கூறியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் உள்ளது மாலங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 32 முதியவர்கள், அரசின் முதியோர் உதவித் தொகை கடந்த பல ஆண்டுகளாக பெற்று வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள கிராமம், மாலங்குடி. முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பியிருக்கும் வானம்பார்த்த பூமி. இந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 32 முதியவர்கள், அரசின் முதியோர் உதவித் தொகையைக் கடந்த பல ஆண்டுகளாகப் பெற்றுவந்தனர்.
ஆனால், தற்போது அவர்களுக்கு அரசின் முரியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், மாலங்குடி கிராமத்துக்கு, ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், இங்குள்ள முதியவர்களில் சிலருக்கு சொந்த வீடு மற்றும் முதியோர்களை ஆதரிப்போர் இருப்பதாக காரணம் கூறி அரசின் உதவித் தொகையை ரத்து செய்ததுதான்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட முதியோர்கள், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தனர். எங்களால் உழைக்க முடியாது; வருமானமும் ஈட்ட முடியாது எனவே நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் முடியாது என்றால் விஷம் கொடுங்கள் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட முதியவர்கள், அரசாங்க உதவி பணத்த வெச்சுதான் பலரின் வாழ்க்கை ஓடுது. எங்கள எந்த புள்ள கவனிக்கப்போகுது. அரசாங்கம்தான் காப்பாத்தணும் என்கின்றனர்.
மேலும், எங்களுக்கு சொந்த வீடு இருக்குன்னு காரணம் சொல்றாங்க. டவுன்ல இருந்தாக்கூட வாடகைக்கு விட்டு பொழைக்கலாம். கிராமத்துல அந்த வீட்டுனால எங்களுக்கு எப்படி வருமானம் வரும்.
அரசாங்கம் கொடுக்கிற உதவியால்தான் மாத்திரை, மருந்துன்னு செலவழிக்கிறோம. இப்படி அந்த பணத்த இல்லன்னு சொன்னா நாங்க எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் அவர்கள் கூறியபோது, முடிஞ்சா, உதவித் தொகை பணத்த கொடுங்க. முடியாட்டி, விஷத்தை கொடுங்கன்னு சொல்லி அதிகாரிகிட்ட மனு கொடுத்துட்டு வந்திருக்கோம் என்று மாலங்குடி கிராமத்து முதியோர்கள் தெரிவித்தனர்.