
போலி ரசீது மூலமாக ரேசன் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்ற ரேஷன் கடை விற்பனையாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “அரியலூர் மாவட்டத்தில் 442 பொதுவிநியோகத்திட்ட ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா? என்று இணைப்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் போலி ரசீது மூலமாக கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அதன்படி ரூ.27 ஆயிரத்து 315 மதிப்பிலான பொருட்களை கூடுதலாக ரூ.1100 சேர்த்து ரூ.28 ஆயிரத்து 415–க்கு விற்றது தெரியவந்தது.
இதில் வீராக்கன்னில் உள்ள ரேசன் கடை விற்பனையாளர் அண்ணாத்துரை மற்றும் இலையூர் ரேசன் கடை விற்பனையாளர் செல்வம் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.