
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், “குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் முறையாக பயன்படுத்தவில்லை” என்று எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வறட்சி நிவாரண பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜிஜேந்திரநாத் ஸ்வைன், ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் முறையாக பயன்படுத்தவில்லை என்றும், குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், குடிநீர் திட்டப்பணிகளுக்கு அதிகாரிகள் கால தாமதமாக அனுமதி அளிக்கிறார்கள் எனவும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார்கள்.
பின்னர், இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியது:
“திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கடுமையான வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க ரூ.20 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆயிரத்து 62 குடிநீர்த் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நான்கு நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 4 ஆயிரத்து 753 கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.6 கோடியே 50 இலட்சம் மதிப்பில் களப்பணி நடந்து வருகிறது.
பதினெட்டு ஏரிகளில் குடிமராமத்து பணிகள் ரூ.1 கோடியே 33 இலட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் சிறு தடுப்பணைகள் ரூ.8 கோடியே 9 இலட்சம் மதிப்பில் ஆயிரத்து 37 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 22 கால்நடை உலர் தீவன கிடங்குகள் திறக்கப்பட்டு மானிய விலையில் கால்நடை விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 700 டன் உலர்தீவனம் கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் வனரோஜா, ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வணிகவரி ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பெருமாள்நகர் கே.ராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், அ.தி.மு.க. நிர்வாகி தருமலிங்கம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.