
அரியலூர்
கீழமாளிகை திரௌபதி அம்மனுக்கு ஏராளமான அடியார்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இதில் அம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் திருமுழுக்கு நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் திரௌபதி அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது.
தீமிதி திருவிழாவை ஒட்டி திரௌபதி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களாள் திருமுழுக்கு நடைபெற்றது. பின்னர், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை கோவில் முன்பு அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. அடியார்கள் செந்துறையில் உள்ள ஏரியில் இருந்து மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கோவில் முன்பு உள்ள தீக்குண்டத்தில் அடியார்கள் ‘ஓம் சக்தி; பராசக்தி’ என்ற பக்தி முழக்கமிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிலர் தங்களது குழந்தைகளை சுமந்தபடி தீமிதித்தனர். அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அடியார்களுக்கு படையல் வழங்கப்பட்டது.
இதில் செந்துறை, ஆர்.எஸ்.மாத்தூர், இரும்புலிக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான அடியார்கள் கலந்து கொண்டு சக்தி தரிசனம் செய்து அருளில் திகைத்தனர்.