தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
1,175 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை அகற்றப்பட்டுள்ளன. சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. விபத்திற்கு எலக்ட்ரானிக் இண்டர்லாக் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்திருந்த 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி
எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அவர்களது பெயர் மற்றும் வயது விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த கோவையைச் சேர்ந்த நாரகணி கோபி, சென்னயை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியதாகவும், கமல் என்பவர் ரயிலில் பயணிக்கவில்லை என்பது தெரியவந்தது.
மீதமுள்ள கார்த்திக், ரகுநாதன், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளதாக ஒடிசா சென்ற தமிழக அரசின் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 127 தமிழர்களில் 119 பேரின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த 5 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களுடன் பயணித்த சக பயணிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்