தமிழக பயணிகள் 8 பேர் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக மாநில கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
ஒடிசாவில் நிகழ்ந்துள்ள ரயில்கள் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு பணிகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும். பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.
மேலும், ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழகத்தை சார்ந்தவர்களின் விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை தொடர்பு கொண்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநில அரசு, அவர்களது பெயர்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி,. (1) நாரகணிகோபி, ஆண், வயது - 34 , (2) கார்த்திக், ஆண், வயது -19, (3) ரகுநாத், ஆண். வயது - 21, (4) மீனா, பெண், வயது - 66, (5) எ. ஜெகதீசன், ஆண், வயது - 47, (6) கமல், ஆண், வயது - 26, (7) கல்பனா, பெண், வயது - 19, (8) அருண், ஆண், வயது -21 ஆகிய 8 நபர்களது பெயர்களை வெளியிட்டுள்ள தமிழக அரசு, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருப்பின், கட்டணமில்லா தொலைபேசி - 1070, செல்பேசி - 9445869843எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன தமிழர்கள் 8 பேர் யார்..? விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பயணிகள் 8 பேர் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக மாநில கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள் 8 பேரும் தட்கல் மூலம் முன்பதிவு செய்த நிலையில், ரயிலில் ஏறவில்லை என தெரிகிறது. எனவே, அவர்கள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 288 பேரில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த 70 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என தமிழகத்தில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.