15 தொகுதி கேட்டோம்... பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

By SG BalanFirst Published Mar 22, 2024, 12:16 AM IST
Highlights

ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தனித்துப் போட்டியிட இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பலத்தை நிரூபிக்க சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீதான உரிமையை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.

இந்நிலையில் இன்று தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் தனித்துப் போட்டியில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க தானே நேரடியாக களத்தில் நின்று போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பாஜகவிடம் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டதாகவும், அதிமுக மீது உரிமை கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அத்தனை தொகுதிகளை உடனடியாக ஒதுக்க இயலாத சூழல் இருப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், ஒரு தொகுதியில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க உள்ளதாவும் அவர் கூறியிருக்கிறார்.

பாஜகவில் தனுக்கு உரிய அன்பும், அங்கீகாரமும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகவே தேர்தலில் தானே களம் இறங்குகிறேன் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தினார். இரட்டை இலையை பெறு வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதிமுக சின்னத்தில் ஈபிஎஸ் அணியினர் போட்டியிட்டால் படுதோல்வி அடைவரா்கள் என்றும் அது அதிமுக தொண்டர்களை மன வேதனை அடையச் செய்யும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

click me!